About Us

வரலாறு

385341_371140942990196_1562316532_n

நெல்லியடி – வடமராட்ச்சியின் மையப் பட்டினம். இதன் நடுநாயகமாகத் திகழும் தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயத்தின் முன்றலில்

திருவாளர்கள் பொ.கதிரமலை, ச.சுப்பிரமணியம், வே.கந்தசாமி, சி.சுப்பிரமணியம், க.பாலசிங்கம் போன்ற சமூகநலச் சிந்தனையாளர்களினால் 1948 ம் வருடம் ஆடி மாதம் 20 ம் நாள் எமது இந்த சனசமூகநிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயத்தில் அக்காலத்தில் இருந்த மடமொன்றில் பிறந்த இந்நிலையம் அன்றைய சூழற்காரணிகளால் சிலகாலம் ஆலய சூழலில் உள்ள ஒரு வீட்டிலும் மேலும் சிலகாலம் கொட்டிற்பிள்ளையார் கோயிலின் முன் உள்ள கடைத்தொகுதியில் வளர்ந்து வந்தது.பின்னர் திருமதி கே.சி.நடராசா அவர்களினால் 1952ம் ஆண்டு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் சமூகநலன் விரும்பிகளின் கடும் உழைப்பால் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு வந்து குடியேறி இன்றும் அவ் இடத்திலேயே தனது பணியை ஆற்றிக்கொணடிருக்கிறது.

ஓவ்வொரு ஸ்தாபனமும் தனக்கென ஒரு இலச்சினையை கொண்டிருப்பது வழக்கமாகும். இந்தவகையில் 1972ம் ஆண்டுப்பகுதியில் திரு எம்.தேவராஜன் தலைமையில் இயங்கிய நிர்வாகத்தினர் சிவப்புநிறப் பின்னணியில் நீளப்பக்கமாக நடந்து செல்லும் சிறுத்தைப்புலி ஒன்றினை எமது நிலையத்தின் சின்னமாக அறிமுகப்படுத்தினர். பிற்காலத்தில் எமது பிரதேசங்களில் நிலவிய அசாதாரண நிலைமைகளின் போது அச்சின்னம் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டு கைவிடப்பட்டது. நீண்ட காலத்தின் பின் 1994ம் ஆண்டில் நிலையப் பொறுப்பை ஏற்ற திரு.சு.கிருஸ்ணராஜா அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தினரின் முயற்சியால் பாலர் கல்விää அறிவுத் தேடல், விளையாட்டு, தொழிற்பயிற்சி, கலைத்திறன் போன்ற அம்சங்களில் எமது நிலையம் சுடர்விட்டுப் பிரகாசிப்பதை குறிக்கும் முகமாக புதிய சின்னம் ஒன்று வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எமது நிலையத்தின ஆரம்ப காலத்தில் இருந்தே வருடா வருடம் சித்திரை புதுவருடத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டு வந்தன எனினும் 1972ம் ஆண்டிலிருந்து திரு எம்.தேவராஜன் அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தினரின் காலத்திலேயே எமது நிலையத்திற்கென “நெல்லியடி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம்” (N.C.C. விளையாட்டுக்கழகம்) என்ற பெயருடன் ஒரு விளையாட்டு அணி உருவாக்கப்பட்டது உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்றவற்றில் பயிற்றுவிக்கப்பட்டு பல போட்டிகளிலும் பங்குபற்றினார்கள். 1975 ம் ஆண்டில் திரு.கி.சிவஞானம் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தினரால் விளையாட்டு அணியினரிற்கான சீருடைகள் பெறப்பட்டு விளையாட்டு அணி மேலும் மெருகூட்டப்பட்டது. வடமராட்சிப் பகுதியிலேயே முதன்முதலாக மின்னொளியில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்திய பெருமை நமது நிலையத்தையே சாரும். 1978ம் ஆண்டு எமது விளையாட்டு அணிகளின் பெண்களுக்கான எறிபந்து அணி ஒன்றும் உருவாக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களிலேயே “சண்முகானந்தா சபா நாடகமன்றம்” என்ற பெயரில் இயமன் வேலாயுதம், சாதிக்கனகர், கலைக்குரிசில் கந்தவனம், கருப்பையாச்சாத்திரியார் போன்ற கலைஞர்களால் புராண இதிகாச நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எழுபதுகளில் நெல்லியடி நாடகமன்றம் என்ற பெயரிலும் பின்னர் அப்பெயர் மாற்றமடைந்து ‘நெல்லியடி அம்பலத்தாடிகள்’ என்ற பெயரிலும் நாடகமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு இளைய பத்மநாதன், நெல்லை க.பேரன் பேன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் வழிகாட்டலில் எமது இளைஞர்களினால் பல முற்போக்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இந்தக் கலைநிகழ்வுகளுக்கு ஒப்பனைகளை வடிவமைப்பதில் திறமையாகச் செயற்பட்ட திரு.த.பாலசுப்பிரமணியம் அவர்களின் பங்கையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

 

நெல்லியடி

நெல்லியடி இலங்கையின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். கரவெட்டி கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது வடமராட்சிப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் (பருத்தித்துறை, கொடிகாமம், திக்கம், யாழ்ப்பாணம் செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியில் வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியில் தமது கிளை அலுவலகங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது ஜூலை 5, 1987 இல் கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.

இங்கு பிறந்த கலைஞர்கள்

  • கந்தவனம் (ஐயா அண்ணன்)- பல்துறைக் கலைஞர்
  • ‘யமன்’ வேலாயுதம்- கூத்து நடிகர்
  • இளைய பத்மநாதன் – நவீன நாடகக் கலைஞர்
  • நெல்லை க. பேரன் – எழுத்தாளர்
  • பரா – குறுந்திரைப்பட இயக்குனர் (பிரான்ஸ்)
  • யாழ்வாணன் – எழுத்தாளர்
  • யாழ் சுதாகர் – பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர்
  • நெல்லை நடேசன் – பத்திரிகை எழுத்தாளர்
  • பரஞ்சோதி பரணீதரன் அறிவியல் எழுத்தாளர்

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*